ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம்:
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக்குரியதுமான ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது, அனைத்து திவ்யதேச பெருமாளையும் தரிசனம் செய்ததற்கு சமம் என்பது ஐதீகம்.
இதனையொட்டி புரட்டாசி 4-வது சனிக்கிழமையான (கடைசி) நேற்று மூலவர் ரெங்கநாதர், தாயார் மற்றும் சக்கரத்தாழ்வார் சன்னதிகளில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ரெங்கநாதரை தரிசனம் செய்து விட்டு வந்த பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர். திருச்சி கே.கே.நகர் இந்திரா நகர் அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல் தா.பேட்டை பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி மாதம் 4-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் நீலியாம்பட்டி தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் மற்றும் அடிவாரத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடந்தன. தா.பேட்டையில் வேணுகோபாலசுவாமி, பிள்ளாபாளையம் நரசிங்க பெருமாள், உத்தண்டம்பட்டி கலியுக ராஜகோபால் சுவாமி, தேவானூர் ஆதிநல்லேந்திர பெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.