5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை - திருமாவளவன்


5 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணை தேவை - திருமாவளவன்
x

உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படை, விமான சாகச நிகழ்ச்சியை நடத்தியுள்ளது. இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை விமானப்படையும் தமிழ்நாடு அரசும் இணைந்து மேற்கொண்டன. இது தொடர்பாக முன்கூட்டியே ஊடகங்களில் வெளியான செய்திகள் பொதுமக்களை வெகுவாக ஈர்த்ததால் லட்சக்கணக்கானவர்கள் மெரினா கடற்கரையில் கூடினர்.

இதில் நூற்றுக்கணக்கானோர் மயக்கமுற்றனர் என்பதும் 5 பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சி மற்றும் வேதனையளிக்கிறது. இந்த சாவுகள் கூட்ட நெரிசலால் ஏற்படவில்லை. வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன எனத் தெரியவருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

எனினும் வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பது குறித்து இன்னும் தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். வெயிலின் கொடுமையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமென்றும், இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா என்பதை விசாரித்து அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உயர்மட்ட விசாரணைக்கு ஆணையிட வேண்டுமென்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story