அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் மண்டபத்தில் இயங்கும் அரசு பள்ளி - புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை
திருவள்ளூரில் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் திருமண மண்டபத்தில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிதர மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு ராஜ வீதி தெருவில் நகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வந்தது. இந்த பள்ளி கட்டிடம் தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வந்தது. இந்த பள்ளியில் திருவள்ளூரை சுற்றியுள்ள ஈக்காடு, வள்ளுவர்புரம், சின்னை ஈக்காடு, தலக்காஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். எல்.கே.ஜி, யு.கே.ஜி மற்றும் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளி செயல்பட்டு வருகிறது. குத்தகை அடிப்படையில் செயல்பட்டு வந்த இப்பள்ளி குத்தகை காலம் முடியும் தருவாயில் இருப்பதாலும் அறக்கட்டளைக்கு அந்த கட்டிடம் தேவைப்படுவதாகவும் கூறி அறக்கட்டளை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி கட்டிடம் மிகவும் சேதமடைந்ததால் வேறு இடத்துக்கு மாற்ற பள்ளி நிர்வாகத்தினர் முடிவெடுத்து திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் பள்ளியை மாற்றினர். தற்போது இந்த பள்ளியில் 123 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் பள்ளியில் மாணவ- மாணவிகள் தனித்தனி அறையில் அமர்ந்து படிக்கும் சூழ்நிலை இல்லாததால் அனைவரும் பெரிய அறையில் ஒன்றாக அமர்ந்து படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு பாடம் சொல்லித் கொடுக்க கரும்பலகை இல்லை. மாணவர்களுக்கு சரியான மேசை நாற்காலி இல்லை. தற்பொழுது திருமண மண்டபத்தில் ஒருபுறம் மாணவர்கள் தரையில் அமர்ந்து படிக்கின்ற நிலையில் அதே இடத்தில் மற்றொரு பக்கத்தில் அங்கன்வாடி மையமும் செயல்படுகிறது. மாணவர்களுக்கு விளையாடுவதற்கு மைதானமும் இல்லை. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தற்போது நகராட்சி நடுநிலைப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் செயல்பட்டு வருகிறது.
கடந்த 3 மாதங்களாக தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இப்பள்ளியை நிரந்தரமான ஒரு இடத்தில் மாற்றுவதற்கு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் அரசு பள்ளிக்கூடத்தை நகரத்தின் மையப் பகுதியில் வேறு ஒரு கட்டிடத்தில் மாற்ற வேண்டும் என்றும், பள்ளிக்கு சொந்த கட்டிடம் கட்டி பள்ளியை மாற்ற வேண்டும் எனவும் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.