நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகள் பறிப்பு


நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகள் பறிப்பு
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த நாகை மீனவர்கள் 12 பேரை மிரட்டி ரூ.8½ லட்சம மதிப்பிலான வலைகளை இலங்கை கடற் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.

நாகப்பட்டினம்

நாகை மீனவர்கள்

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மீனவர் காலனியை சேர்ந்தவர் மணியன்(வயது 57). இவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த வேல்முருகன்(27), சத்யராஜ்(32), அக்கரைப்பேட்டையை சேர்ந்த கோடிலிங்கம்(53) ஆகிய 4 மீனவர்களும் வெள்ளப்பள்ளத்தில் இருந்து நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

இவர்கள் கோடியக்கரைக்கு வடகிழக்கே சுமார் 10 நாட்டிக்கல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மற்றொரு படகில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வந்தனர்.

சரமாரி தாக்குதல்

தொடர்ந்து வெள்ளப்பள்ளம் மீனவர்களின் பைபர் படகை சுற்றி வளைத்த கடற்கொள்ளையர்கள் தாங்கள் வைத்து இருந்த அரிவாள் மற்றம் இரும்பு கம்பியால் மீனவர்களை சரமாரியாக தாக்கினர். மேலும் மீன்பிடி வலைகள், ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, செல்போன் மற்றும் மீனவர்கள் அணிந்திருந்த வெள்ளியால் ஆன அரைஞான்கயிறு உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறித்து சென்றனர்.

கடல் கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டியதில் மணியன், கோடிலிங்கம் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். மற்ற மீனவர்களான வேல்முருகன், சத்தியராஜ் ஆகியோருக்கு உடலில் உள்காயம் ஏற்பட்டது.

இந்த 4 மீனவர்களும் நேற்று காலை கரைக்கு வந்தடைந்தனர். பின்னர் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக நாகை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் உறவினர்கள் சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆறுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தமிழக மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

அப்போது நாகை நகர் மன்ற உறுப்பினர் மாரிமுத்து, மீன்வளத்துறை உதவி இயக்குனர் ஜெயராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மீன்பிடி வலைகள் பறிப்பு

இதேபோல் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன், சுப்பிரமணியன், சசிகுமார், சரத்குமார் ஆகிய 4 மீனவர்களும் மீன்பிடிக்க கடலுக்கு பைபர் படகில் சென்றனர்.இவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மற்றொரு பைபர் படகில் ஆயுதங்களுடன் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள், ஆறுகாட்டுத்துறை மீனவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி 400 கிலோ மீன்பிடி வலைகளை பறித்து சென்றனர். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதேபோல் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த சிவக்குமார், சின்னத்தம்பி, பழனிவேல், சின்னையன் ஆகிய 4 மீனவர்களும் கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், இவர்களை மிரட்டி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 600 கிலோ மீன்பிடி வலைகளை கொள்ளையடித்து சென்றனர்.

வழக்குப்பதிவு

இதுகுறித்த புகாரின்பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஒரே நாளில் இலங்கை கடற்கொள்ளையர்கள் வெள்ளப்பள்ளம், ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் 12 பேரை தாக்கியும், மிரட்டியும் ரூ.8½ லட்சம் மதிப்பிலான மீன்பிடிவலை உள்ளிட்டவற்றை பறித்துச்சென்ற சம்பவம் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தொடரும் அட்டூழியம்

தமிழக மீனவர்களை தாக்கி வலைகள், ஜி.பி.எஸ்.கருவிகள் உள்பட பொருட்கள், மீன்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்செல்லும் சம்பவம் சமீப நாட்களாக தொடர்ந்து நடந்து வருகிறது.

அவர்களது அட்டூழியத்தால் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவே அச்சமாக உள்ளதாக தெரிவிக்கும் நாகை மீனவர்கள், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுத்து அச்சமின்றி தங்கள் தொழிலை தொடர ஏற்பாடு வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story