ஓட்டலில் சோதனை நடத்திய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி


ஓட்டலில் சோதனை நடத்திய போலி உணவு பாதுகாப்பு அதிகாரி
x

ஓட்டலில் சோதனை நடத்திய உணவு போலி பாதுகாப்பு அதிகாரி கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு

ஓட்டலில் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு பிரபல ஓட்டலில் கடந்த மாதம் இரவு உணவு சாப்பிட்ட ஒரு குடும்பத்தினர் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது சம்பந்தமாக வந்த புகாரின் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உத்தரவின் பேரில் காட்டாங்கொளத்தூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மணிமாறன் நேற்று முன்தினம் மாலை 3 மணி அளவில் ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலில் உணவு தரத்தை சமையலறையில் ஆய்வு செய்து கொண்டிருந்தார்.

அப்போது அதே ஓட்டலுக்கு வந்த ஒரு வாலிபர் நான் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு அலுவலர். உங்கள் ஓட்டலில் உணவு தரம் பற்றி எங்களுக்கு புகார் வந்துள்ளது. ஆகவே உங்கள் ஓட்டலில் உள்ள உணவுகளை ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கடை ஊழியரிடம் கூறியுள்ளார்.

போலீசில் புகார்

உங்கள் அடையாள அட்டையை காண்பியுங்கள் என்று ஊழியர் கேட்டார். அதற்கு அந்த வாலிபர் தன்னுடைய கையில் வைத்திருந்த போலி அடையாள அட்டையை காண்பித்தார். இதனை தொடர்ந்து உள்ளே உள்ள உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் வெளியே ஒரு உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவரை உங்களுக்கு தெரியுமா? என்று கேட்டார். இதனால் சந்தேகம் அடைந்த அவர் கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசில் இது சம்பந்தமாக புகார் அளித்தார்.

கைது

இதை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது அவர் கடலூர் மாவட்டம், நெய்வேலி இந்திரா நகரை சேர்ந்த சுரேந்தர் (வயது 23), என்பது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த சில வாரங்களாக தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி என்று கூறி சோதனை செய்து சில ஓட்டல்களுக்கு அபராதம் விதித்து வந்தது தெரியவந்தது.

போலி அதிகாரியாக மாறியது எப்படி?

கடலூர் மாவட்டம் நெய்வேலி பகுதியை சேர்ந்தவர் சுரேந்தர். எம்.ஏ. பட்டதாரி. இவர் அரசு வேலைக்கு தேர்வுகள் எழுதி வேலை கிடைக்காத விரக்தியில் சென்னையில் பல்வேறு இடங்களில் வேலை தேடி அலைந்துள்ளார். இந்த நிலையில் தாம்பரத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சில மாதங்களுக்கு முன்பு சாப்பிடுவதற்கு சென்றார். அங்கு அவருக்கு பரிமாறப்பட்ட உணவு சரியில்லாமல் இருந்தது. இது குறித்து ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டார்.

அப்போது ஓட்டல் ஊழியர்கள் நீ என்ன உணவு பாதுகாப்புத் துறை அதிகாரியா? என்று மிரட்டி உள்ளனர். இதனால் சுரேந்தர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியாக மாறிவிட்டால் இதுபோன்ற ஓட்டல் நடத்தும் உரிமையாளர்களை நாம் கேள்வி கேட்கலாம் என்று எண்ணி வேலை கிடைக்காத விரக்தியில் போலி அடையாள அட்டையை தயாரித்து உணவு பாதுகாப்பு அதிகாரியாக வலம் வந்து பல்வேறு ஓட்டல்களில் சோதனைகளை செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story