கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல பெண் போட்ட நாடகம்... கர்ப்பகால 'ஸ்கேன் ரிப்போர்ட்' டால் சிக்கிக்கொண்ட சம்பவம்


கணவனை பிரிந்து காதலனுடன் செல்ல பெண் போட்ட நாடகம்... கர்ப்பகால ஸ்கேன் ரிப்போர்ட் டால் சிக்கிக்கொண்ட சம்பவம்
x
தினத்தந்தி 20 Sept 2022 10:58 PM IST (Updated: 21 Sept 2022 2:24 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் பெண் ஒருவர் தனது கணவரை பிரிந்து கள்ளக்காதலனுடன் செல்ல திட்டமிட்டு, திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்தது போல் ஸ்கேன் ரிப்போர்டில் திருத்தம் செய்தார். ஆனால் அதை கணவருக்கு அனுப்புவதற்கு பதில் டாக்டருக்கு அனுப்பியதால் சிக்கிக்கொண்ட ருசிகர சம்பவம் நடந்துள்ளது.

தேனி

கள்ளக்காதல்

தேனியை சேர்ந்த சுமார் 30 வயது பெண் ஒருவர் தனது கணவர், குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பே வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் இருந்தது. திருமணத்துக்கு பிறகு அந்த பழக்கம் கள்ளக்காதலாக தொடர்ந்தது. கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், அந்த பெண் தனது கணவரை பிரிந்து செல்ல திட்டமிட்டார். ஆனால், தானாக செல்வதை விடவும், கணவர் மூலம் பிரச்சினையை உருவாக்கி பிரிந்து செல்ல நூதன முறையில் திட்டமிட்டார்.

இதற்காக அவர் திருமணத்துக்கு பிறகு கர்ப்பமாகி பரிசோதனைக்காக எடுத்த ஸ்கேன் ரிப்போர்ட்டை எடுத்தார். அப்போது 'போட்டோ-ஷாப்' மூலம் அதில், திருமணத்துக்கு முன்பே கர்ப்பமாக இருந்தது போல் கர்ப்ப காலத்தை திருத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

கண்டுபிடித்த டாக்டர்

போலியாக திருத்தப்பட்ட ஸ்கேன் ரிப்போர்ட்டை தனது கள்ளக்காதலனுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பி வைத்தார். அதை தனது கணவரின் செல்போன் எண்ணுக்கு 'வாட்ஸ்-அப்' மூலம் அனுப்பி வைத்து, திருமணத்துக்கு முன்பே தாங்கள் நெருங்கி பழகி கர்ப்பமாகி விட்டதாகவும், பிறந்த குழந்தைக்கு தான் தான் அப்பா என்று சித்தரித்து அனுப்புமாறு கூறியுள்ளார்.

ஆனால், அவர் திருத்தம் செய்த ஸ்கேன் ரிப்போர்ட்டை கள்ளக்காதலியின் கணவருக்கு அனுப்பவில்லை. மாறாக ஸ்கேன் ரிப்போர்ட்டில் இருந்த டாக்டரின் செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் அனுப்பி விட்டார். டாக்டர் இதைப் பார்த்தவுடன், ஸ்கேன் ரிப்போர்ட் திருத்தப்பட்டு இருப்பதை கண்டுபிடித்து விட்டார். தனது பெயரில் உள்ள ரிப்போர்ட்டை திருத்தியதை அறிந்த அந்த டாக்டர் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், அவருடைய கள்ளக்காதலனையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தவறுதலாக அனுப்பியதாக கூறி மன்னிப்பு கேட்டனர். இதையடுத்து 2 பேரையும் மன்னித்து, எச்சரித்து அனுப்புமாறு டாக்டர் கேட்டுக்கொண்டார். பின்னர் அவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் இந்த விவகாரத்தை தனது கணவரிடம் தெரிவித்து விடாதீர்கள் என்று போலீசாரிடம் கெஞ்சினார். போலீசாரும், "எப்படி எல்லாம் வழக்குகள் வருகிறது?" என நொந்துபோயினர்.


Next Story