திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் இடையேயான தகராறு கோஷ்டி மோதலாக மாறியது


திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் இடையேயான தகராறு கோஷ்டி மோதலாக மாறியது
x

திருத்தணி அருகே பள்ளி மாணவர்கள் இடையேயான தகராறு கோஷ்டி மோதலாக மாறியது. இதில் ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர்

மாணவர்களிடையே தகராறு

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காந்தி ரோடு பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று காலை பள்ளியில் தரணிவராகபுரம் எட்டிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த மாணவன் ஒருவனுக்கும், பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்த மாணவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். பின்னர் மாலை பள்ளி முடிந்ததும் மாணவர்கள் வீட்டுக்கு பஸ்சில் செல்லும்போது மறுபடியும் 2 மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

கோஷ்டி மோதல்

இந்நிலையில் பொன்பாடி பகுதியைச் சேர்ந்த மாணவன் தனது பெற்றோர்களிடம் பள்ளியில் படிக்கும் மாணவன் ஒருவன் தன்னை தாக்கியதாக கூறினார். இதையடுத்து மாணவனின் பெற்றொர்கள், உறவினர்கள் 10-க்கும் மேற்பட்டோர் தரணிவரகபுரம் கிராமத்திற்கு சென்று அந்த மாணவனை தேடியதாக கூறப்படுகிறது. இதனால் தரணிவராகபுரம் கிராம மக்களுக்கும், பொன்பாடி மாணவனின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கல்லால் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் தரணிவாராபுரம் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பரபரப்பு

இதையடுத்து வீட்டிலிருந்த மாணவனை தாக்கிய பொன்பாடி கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தரணிவராகபுரம் மக்கள் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற திருத்தணி போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற நபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவனை தாக்கிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

அசம்பாவிதங்களை தடுக்க தரணிவராகபுரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் இடையேயான தகராறு கோஷ்டி மோதலாக மாறியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story