இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை சிறைபிடித்த பொதுமக்கள்
தக்கலை அருகே இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்தனர். பின்னர் அந்த லாரிக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரள மாநிலத்தில் இருந்து தினமும் குமரி மாவட்டம் வழியாக கன்டெய்னர் லாரிகளில் இறைச்சி கழிவுகளை ஏற்றி செல்லும் சம்பவம் நடந்து வருகிறது. அவ்வாறு வரும் ஒரு சில லாரிகள் மட்டும் பொதுமக்களிடம் சிக்குகிறது. அந்த லாரிகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கிறார்கள். எனினும் கழிவுகளை ஏற்றி வரும் லாரிகளின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தக்கலை தேசிய நெடுஞ்சாலை வழியாக இறைச்சி கழிவுகளை ஏற்றிக் கொண்டு கன்டெய்னர் லாரி வந்தது.
இதனை கவனித்த பொதுமக்கள் அந்த லாரியை விரட்டி சென்றனர். பின்னர் கொல்லன்விளை பகுதியில் வைத்து லாரியை மடக்கி பிடித்து சிறைபிடித்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு இறைச்சி கழிவின் துர்நாற்றம் அளவுக்கு அதிகமாக வீசியதாக அந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தி மருந்துக்கோட்டை நகராட்சி உரக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர் மோகன் அந்த வாகனத்திற்கு ரூ.15 அபராதம் விதித்து அதற்கான தொகையையும் வசூலித்தார். பின்னர் இரவோடு இரவாக அந்த லாரியை கேரளாவுக்கு அனுப்பி வைத்தனர்.