நீலகிரியில் 'கூகுள் மேப்' உதவியுடன் வந்து படிக்கட்டுகள் நடுவே சிக்கிக்கொண்ட கார்..
'கூகுள் மேப்' காட்டிய வழியில் திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால் கார் ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியானது கேரள, கர்நாடக எல்லைப்பகுதியில் உள்ளது. இந்த பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள், கூடலூர் வழியாகவே உதகை போன்ற பிற சுற்றுலா தலங்களுக்கு செல்கின்றனர்.
இந்த நிலையில், தொடர் விடுமுறையால் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில், கர்நாடகாவை சேர்ந்த இளைஞர்கள், தங்களது சொந்த காரில் நீலகிரிக்கு சுற்றுலா வந்துவிட்டு, பின்னர் சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் 'கூகுள் மேப்' உதவியுடன் காரில் சென்றுகொண்டிருந்தனர்.
'கூகுள் மேப்' காட்டிய வழியில் திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர், படிக்கட்டுகளில் காரை நிறுத்திவிட்டு, செய்வதறியாது திகைத்தார்.
இதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் உதவியுடன் ஒருமணிநேர போராட்டத்திற்கு பிறகு படிக்கட்டுகளில் கற்களை அமைத்து கார் சாலைக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் அவர்கள் நிம்மதியாக தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர்.