விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம்


விவேகானந்தர் மண்டபம்-திருவள்ளுவர் சிலை இடையே விரைவில் கண்ணாடி கூண்டு பாலம்
x

கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

கன்னியாகுமரி,

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் அதன் அருகில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர். கடல்நீர்மட்டம் தாழ்வான காலங்களில் விவேகானந்தர் மண்டபத்துக்கு மட்டுமே படகுகள் இயக்கப்படுகிறது. இதனால் கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் அருகில் சென்று பார்க்க முடியாத நிலை உள்ளது.

எனவே, விவேகானந்தர் மண்டபத்தையும், திருவள்ளுவர் சிலையையும் இணைக்கும் வகையில் நடைபாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

இந்த பாலத்துக்கான கட்டுமான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறையில் முதலில் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இருபுறமும் 2 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை தலா 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளன. கடல் உப்பு காற்றினால் பாதிக்காத வகையில் ரசாயன கலவை கலந்த சிமெண்ட் காங்கிரீட் மூலம் தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையே புதுச்சேரியில் இந்த இணைப்பு பாலத்துக்கான கூண்டு வடிவமைத்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டு மொத்தம் 222 டன் எடை கொண்டதாகும். கடல் உப்பு காற்றினால் துருப்பிடிக்காத வகையில் உள்ள கம்பிகள் மூலம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 101 பாகங்களாக இந்த கூண்டு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூண்டில் தற்போது வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. வர்ணம் பூசும் பணி முடிந்ததும் இந்த கூண்டு தனித்தனியாக பிரிக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளது. அதன்பிறகு விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள ராட்சத தூண்கள் மீது இந்த 101 பாகங்களும் இணைக்கப்பட்டு கண்ணாடி கூண்டு பொருத்தப்படவுள்ளது.


Next Story