நடுரோட்டில் பழுதாகி நின்ற லாரி; போக்குவரத்து பாதிப்பு
வேடசந்தூர் அருகே லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேடசந்தூர்-வடமதுரை இடையே சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேடசந்தூர் அருகே தீயணைப்பு நிலையம் முன்பு நடைபெறும் பணிக்காக ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் இருந்து ஜல்லிக்கற்களை கொட்ட முயன்றபோது திடீரென பழுதடைந்து விட்டது. நடுரோட்டில் லாரி நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக வேடசந்தூர்-வடமதுரை சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அரசு மற்றும் தனியார் பஸ்களில் வந்த பயணிகள் மற்றும் வாகனங்களில் பயணித்த பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். இதற்கிடையே லாரியை அந்த இடத்தில் இருந்து நகர்த்த டிரைவர் மேற்கொண்ட முயற்சி தோல்வியையே சொந்தமாக்கியது.
இதனையடுத்து பொக்லைன் எந்திரம் கொண்டு வரப்பட்டு, சாலையோரத்திலேயே மாற்றுப்பாதை அமைக்கப்பட்டது. அந்த வழியாக வாகனங்கள் சென்றன. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு படை நிலைய அலுவலர் ஜேம்ஸ்குமார் தலைமையிலான தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். பின்னர் அவர்கள், பழுதை நீக்கி லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். சாலையின் குறுக்கே பழுதாகி நின்ற லாரியால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.