மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற வங்கி கணக்கு தொடங்கலாம்
மகளிர் உரிமை திட்டத்தில் பயன்பெற வங்கி கணக்கு தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ந் தேதி தொடங்குகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. உரிமைத் தொகை பெறுவதற்கான தகுதிகள் என்ன என்பதையும் அரசு வெளியிட்டுள்ளது.இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, வீடு தேடி கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாளில் கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச்செல்ல வேண்டும்.
வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் சேமிப்பு கணக்கு தொடங்க வங்கிகளை நாடிச்செல்கின்றனர். வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என்றால் குறைந்த பட்ச இருப்புத்தொகை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.இதனால், மக்கள் பயன்பெறும் வகையில் திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை எதுவும் இல்லாமல், 'ஜீரோபேலன்ஸ்' என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டு வருகின்றன. சேமிப்பு கணக்கு தொடங்க வரும் பெண்களுக்கு உடனுக்குடன் கூட்டுறவு வங்கிகளில் கணக்கு தொடங்கப்படுகின்றன.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், கீழப்பழுவூர், தா.பழூர், ஆண்டிமடம், அரியலூர், வி.கைகாட்டி, ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, செந்துறை ஆகிய 9 இடங்களில் உள்ள திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமோ, குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் என்று கூட்டுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.