நெல்லையில் கனமழையால் இதுவரை 9 பேர் உயிரிழப்பு
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
திருநெல்வேலி,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை கொட்டித்தீர்த்தது.
குறிப்பாக. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காயல்பட்டினத்தில் அதீத மழை பெய்தது.
கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தாமிரபரணியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால், மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். தற்போது திருநெல்வேலி. தூத்துக்குடியில் மழை ஓய்ந்துள்ளதால் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில், நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. நீரில் மூழ்கி இருவரும், சுவர் இடிந்ததில் இருவரும், மின்சாரம் தாக்கி ஒருவர் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.