85 அரசு பள்ளிகள், நூலகங்களுக்கு புத்தகங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 85 அரசு பள்ளிகள், நூலகங்களுக்கு கலெக்டர் மோகன், துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் புத்தகங்களை வழங்கினர்
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் நூலகங்களுக்கு விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் துரை.ரவிக்குமாரின் உள்ளூர் வளர்ச்சி நிதியில் இருந்து புத்தகங்கள் வழங்கும் விழா நேற்று மாலை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட கலெக்டர் மோகன், துரை.ரவிக்குமார் எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 63 அரசு உயர்நிலைப்பள்ளிகளுக்கும், திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 22 பள்ளிகளுக்கும் என மொத்தம் 85 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு கிளை நூலகங்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினர்.
இதில் திண்டிவனம் சப்-கலெக்டர் அமித், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, ஆசிரியர்கள் மோகனசுந்தரம், காங்கேயன், எழுத்தாளர்கள் ராமமூர்த்தி, செங்குட்டுவன், நகரமன்ற கவுன்சிலர் வித்யசங்கரி பெரியார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் நன்றி கூறினார்.