பெரியமேட்டில் நீச்சல்குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி - பயிற்சியாளர்கள் 3 பேர் கைது


பெரியமேட்டில் நீச்சல்குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலி - பயிற்சியாளர்கள் 3 பேர் கைது
x

சென்னை பெரியமேட்டில் நீச்சல் குளத்தில் மூழ்கி 7 வயது சிறுவன் பலியானான். கவனக்குறைவாக செயல்பட்டதாக பயிற்சியாளர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

சென்னை கொசப்பேட்டை ஹாஜி முகமது அப்பாஸ் தெருவைச் சேர்ந்தவர் ராகேஷ் குப்தா. இவருடைய மகன் தேஜா குப்தா (வயது 7). இவர், வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

ராகேஷ் குப்தா தனது மகனை, சென்னை பெரியமேட்டில் உள்ள மை லேடி பூங்கா நீச்சல் குளத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நீச்சல் பயிற்சிக்கு சேர்த்துவிட்டார். சிறுவனின் தாத்தா சசிகுமார், நீச்சல் பயிற்சிக்காக நாள்தோறும் சிறுவனை அழைத்துச்சென்று வருவார்.

நேற்று முன்தினம் மாலை தேஜா குப்தாவை, தாத்தா சசிகுமார் நீச்சல் பயிற்சிக்காக அழைத்துச்சென்று பயிற்சியாளர்கள் செந்தில்குமார், சுமன் ஆகியோரிடம் அனுப்பிவிட்டு சென்றார். சிறுவன் தேஜாகுப்தா, சுமார் 20 நிமிடமாக 4 அடி ஆழமுள்ள இடத்தில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக திடீரென தேஜா குப்தா நீரில் மூழ்கினார். இதனை கண்ட பயிற்சியாளர்கள் தேஜா குப்தாவை நீச்சல் குளத்தில் இருந்து மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு மோட்டார்சைக்கிளில் கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், தேஜா குப்தா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதுபற்றி பெரியமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வேப்பேரி உதவி கமிஷனர் அரிகுமார், பெரியமேடு இன்ஸ்பெக்டர் திவ்யகுமார் ஆகியோர் இதுபற்றி வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.பலியான சிறுவனின் உடலை பார்த்து அவனது பெற்றோர் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுவனின் உடல் நேற்று அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் உயிரிழந்த நீச்சல்குளம் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமானது. அதனை தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பராமரித்து வந்தது. நீச்சல் பயிற்சியாளர்கள் செந்தில்குமார் மற்றும் சுமன் மற்றும் உயிர் காப்பாளர் பிரேம்குமார் ஆகிய 3 பேரும் அஜாக்கிரதையாக செயல்பட்டதால் சிறுவன் நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கி பலியானது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் நீச்சல் பயிற்சியாளர்களான திருவல்லிக்கேணியை சேர்ந்த செந்தில்குமார் (37), சுமன் (31) மற்றும் உயிர் காப்பாளர் பிரேம்குமார் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதில், உயிர் காப்பாளர் பிரேம்குமார் சம்பவம் நடந்த அன்றுதான் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இதேபோல, நீச்சல் குளம் அமைந்துள்ள இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை கைப்பற்றியும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story