ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 11 Feb 2023 12:00 AM IST (Updated: 11 Feb 2023 12:00 AM IST)
t-max-icont-min-icon

வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது

விழுப்புரம்

விழுப்புரம்

7 பேர் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் மனைவி டெய்சி (வயது 27). இவர் தனது தாய் மேரி, தங்கை ஜோவிதா, தம்பி டோனி, சித்தி ஜேசுராணி, அவரது மகன்கள் டெனிஷ், ஆல்வின் ஆகியோருடன் நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு வந்த டெய்சி, திடீரென தான் கொண்டு வந்திருந்த கேனை திறந்து அதிலிருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றியதோடு, தனது குடும்பத்தினர் மீதும் ஊற்றி குடும்பத்தோடு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் 7 பேரையும் தடுத்து நிறுத்தி மண்எண்ணெய் கேனை பிடுங்கியதோடு அவர்கள் மீது முன்னெச்சரிக்கையாக தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் டெய்சி கூறியதாவது:-

வேலை வாங்கித்தருவதாக மோசடி

எனக்கு சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி, அதே கிராமத்தை சேர்ந்த சத்துணவு பொறுப்பாளர் எமிலிமேரி என்னிடம் இருந்து 4 பவுன் நகையை வாங்கினார். ஆனால் அவர் வேலை ஏதும் வாங்கித்தராமல் ஏமாற்றி வந்தார். இதனால் நான், எமிலிமேரியிடம் சென்று வேலைக்காக, நான் கொடுத்த நகையை திருப்பித்தரும்படி கேட்டேன். அதற்கு அவர் தர மறுத்து ஏமாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26-ந் தேதியன்று நான் எனது குழந்தைகளுடன், அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றபோது, எமிலிமேரி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து என்னை திட்டியதோடு எனது முகத்தில் மிளகாய் பொடியை தூவி, கழுத்தில் அணிந்திருந்த தாலி மற்றும் அதில் கோர்த்திருந்த 5 பவுன் நகைகளை பறித்துச்சென்றனர்.

நடவடிக்கை இ்ல்லை

இதுபற்றி நான் கண்டாச்சிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். ஆனால் இதுவரையிலும், அந்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சத்துணவு அமைப்பாளர் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த எமிலிமேரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். இதை கேட்டறிந்த போலீசார், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும் இது குறித்து டெய்சி மீது தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கலெக்டர் அலுவலகத்தில் இதுபோன்ற அசம்பாவித செயலில் ஈடுபடக்கூடாது என்று அவர்களை எச்சரிக்கை செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story