ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக 688 வழக்குகள் பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x

சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27-ந்தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணியோடு தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன. தேர்தலையொட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் ரூ.64.34 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

அதே போல் 688 வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் அதிகபட்சமாக 547 வழக்குகள் தமிழ்நாடு மதுவிலக்கு தடுப்பு பிரிவில் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெளியூர்களில் இருந்து வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வரும் அரசியல் கட்சியினர், தேர்தல் நடத்தை விதிகளின்படி நாளை மாலை 5 மணியோடு ஈரோடு கிழக்கு தொகுதியில் இருந்து வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

தேர்தலுக்காக ஈரோடு கிழக்கு தொகுதியில் 138 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 1,430 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், இதில் 310 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வி.வி.பேட் வசதி உள்ளதாகவும் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.



Next Story