ரூ.650 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்செயல்படுத்தப்படும்-அமைச்சர் கே.என். நேரு பேச்சு


ரூ.650 கோடியில் பாதாள சாக்கடை திட்டம்செயல்படுத்தப்படும்-அமைச்சர் கே.என். நேரு பேச்சு
x

நெல்லை மாநகராட்சியில் ரூ.650 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அமைச்சர் கே.என். நேரு கூறினார்.

திருநெல்வேலி

"நெல்லை மாநகராட்சியில் ரூ.650 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்" என்று அமைச்சர் ேக.என். நேரு கூறினார்.

ரூ.422 கோடி திட்டப்பணிகள்

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் நெல்லை மாநகராட்சியில் ரூ.422 கோடியே 79 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளின் தொடக்க விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கத்தில் நேற்று நடந்தது.

சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜகண்ணப்பன் முன்னிலை வகித்தார். நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் வரவேற்று பேசினார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சீவ்தாஸ் மீனா திட்ட விளக்க உரை ஆற்றினார்.

அமைச்சர் தொடங்கி வைத்தார்

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு, ரூ.295 கோடி மதிப்பீட்டில் நெல்லை மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் அரியநாயகிபுரம் குடிநீர் மேம்பாட்டு திட்டம் பணி மற்றும் ரூ.56 கோடியில் பொருட்காட்சி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள வர்த்தக மையம் மற்றும் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்.புதிய பஸ் நிலையத்தில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள பல அடுக்கு இருசக்கர வாகன காப்பகங்கள், மேம்படுத்தப்பட்ட நேருஜி கலையரங்கம் உள்ளிட்ட ரூ.422 கோடி 79 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை திறந்து வைத்து பேசினார்.

சிறப்பாக ஆட்சி

அப்போது அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று இந்த 2 ஆண்டுகளில் நகரங்கள் மேன்மைப்படுவதற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பாக ஆட்சி நடத்தி வருகிறார்.

நெல்லை மாவட்டத்திற்கு கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மாநகராட்சிக்கு ரூ.198 கோடியே 87 லட்சத்தில் திட்டப்பணிகள், நகராட்சிகளுக்கு ரூ.106 கோடியே 44 லட்சத்தில் திட்டப்பணிகள், பேரூராட்சி பகுதிகளுக்கு ரூ.206 கோடியே 31 லட்சத்தில் திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ.1,496 கோடியை 77 லட்சத்தில் குடிநீர் திட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாதாள சாக்கடை

நெல்லை மாநகராட்சி பகுதியில் ரூ.650 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராகவும், உள்ளாட்சித்துறை அமைச்சராகவும், துணை முதல்-அமைச்சர் ஆகவும் இருந்துள்ளார். எனவே அவருக்கு எல்லா பிரச்சினைகளும் தெரியும். இதனால் நகரங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த துறைக்கு ரூ.24 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி உள்ளார். எனவே நீங்கள் நினைத்தது நடக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் இந்த ஆட்சியில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ஞானதிரவியம் எம்.பி., கலெக்டர் கார்த்திகேயன், நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல் வகாப், நயினார் நாகேந்திரன், நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.எல்.ஏ.கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர்கள் பிரான்சிஸ், ரேவதி பிரபு, முன்னாள் மண்டல தலைவர் தச்சை சுப்பிரமணியன், பேரூராட்சிகளின் இயக்குனர் கிரன் குராலா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

முன்னதாக மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.



Next Story