63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி
கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங்ஸ் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். இதை நினைவுகூறும் வகையில் நாடு முழுவதும் காவல்துறை பணியில் வீர, தீர செயல்களின்போது உயிரிழந்த போலீசாருக்கு வீரவணக்க அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்தாண்டு கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கடலூர் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ராணுவ நினைவு தூண் முன்பு நேற்று காலை வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
இதில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் கலந்துகொண்டு பணியின்போது வீரமரணம் அடைந்த போலீசாரின் நினைவு தூணிற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியின்போது பணிக்காலத்தில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு, ஆயுதப்படை காவலர்கள் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீரவணக்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உயிரிழந்த போலீசார் விட்டுச்சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீர தியாகம் வீண்போகாது என்று அனைத்து போலீசாரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் அசோக்குமார், சீனிவாசலு, ரவிச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரபு, சவுந்தரராஜன், ஓய்வுபெற்ற துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விநாயகம், ஊர்க்காவல் படை வட்டார தளபதி அம்ஜத்கான், இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, மாவட்ட தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஆறுமுகம், ஆயுதப்படை உதவி ஆய்வாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.