அரசு வேலைக்காக காத்திருக்கும் 53 லட்சம் பேர் - தமிழக அரசு வெளியிட்ட தகவல்
அரசு வேலைக்காக பெயர்ப் பதிவு செய்து காத்துக்கொண்டு இருப்பவர்களின் விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர்கள் உள்பட பலர் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர்ப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த மே மாதம் 31-ந் தேதி வரை 53 லட்சத்து 48 ஆயிரத்து 663 பேர், அரசு வேலைக்காக பெயர்ப் பதிவு செய்து காத்துக்கொண்டு இருக்கின்றனர் என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, அவர்களில் ஆண்கள் 24 லட்சத்து 63 ஆயிரத்து 81; பெண்கள் 28 லட்சத்து 85 ஆயிரத்து 301; மூன்றாம் பாலினத்தவர் 281 ஆகும். அவர்களில் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 72 ஆயிரத்து 353; 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 27 ஆயிரத்து 649; 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 93 ஆயிரத்து 40;
46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 811; 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 7,810 ஆகும். அவர்களில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை 1.50 லட்சமாகும்.