துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு


துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு
x

துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டுபோனது.

திருச்சி

துவாக்குடி:

கதவு திறந்து கிடந்தது

திருச்சியை அடுத்த நவல்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாலச்சந்தர் (வயது 45). இவர் நவல்பட்டு அருகே உள்ள மத்திய படைக்கலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்பு துறை அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ரேணுகா(40). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவர்களது மகள் நாமக்கல்லில் தங்கி படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 22-ந் தேதி பாலச்சந்தர் கேரள மாநிலம் திருச்சூருக்கு சென்றுள்ளார். ரேணுகா நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு காட்டூருக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று காலை அவரது வீடு திறந்து கிடப்பதாக பக்கத்து வீட்டுக்காரர்கள் ரேணுகாவிற்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு, வீட்டில் உள்ள 2 பீரோக்களும் திறந்து கிடந்தன. மேலும் பீரோக்களில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. இது பற்றி அவர் நவல்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் திருவெறும்பூர் துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தனர். அங்கு மோப்ப நாய் லீலி வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிய மோப்ப நாய், அந்த பகுதியில் உள்ள மெயின் ரோட்டிற்கு சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

52 பவுன் நகைகள் திருட்டு

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே புகுந்து சுமார் 52 பவுன் நகைகள் மற்றும் வெள்ளிப்ெபாருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story