கொசஸ்தலை ஆற்றில் 500 மணல் மூட்டைகள் பறிமுதல்
திருவாலங்காடு அருகே கொசஸ்தலை ஆற்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாலங்காடு ஒன்றியம் வெங்கடாபுரம் அருகே கொசஸ்தலை ஆற்றிலிருந்து இரவு நேரங்களில் கூலி ஆட்கள் வைத்து மூட்டைகளில் மணல் கடத்தப்படுவதாக சிவ்வாடா கிராம நிர்வாக அலுவலர் பவதரணிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் திருத்தணி தாசில்தார் வெண்ணிலாவிற்கு தகவல் தெரிவித்தார். அவரின் உத்தரவின் படி நேற்று இரவு வருவாய் துறையினர் வெங்கடாபுரத்திலிருந்து இல்லத்தூருக்கு செல்லும் சாலை அருகே கொசஸ்தலை ஆற்றில் மூட்டைகளில் மணல் நிரப்பி அந்த பகுதியில் உள்ள கரும்பு தோட்டத்தின் அருகே பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.
பின்னர் அங்கிருந்த 500-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். நல்லாட்டூர், என்.என். கண்டிகை, அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கிறது. மணல் கொள்ளையர்கள் எந்தவித அனுமதியும் இன்றி மணலை மூட்டைகளில் கட்டி இரு சக்கர வாகனம் மற்றும் டிராக்டர்களில் இரவு நேரங்களில் கடத்தி செல்கிறார்கள். மணல் கடத்தல்காரர்கள் சில நேரங்களில் ஆற்றின் கரைகளை உடைத்து அதிலிருந்து மணல் மற்றும் சவுடு மணல் கொள்ளை அடிப்பதால் கரை மிகவும் பலவீனமடைந்து மழை காலங்களில் ஆற்றில் செல்லும் தண்ணீரானது ஊருக்குள் புகுந்து விடும் என்ற அச்சமும் அந்த பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்று மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.