தூய்மைப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக ரூ.50 கோடி வைப்பு நிதி - தமிழக அரசு அறிவிப்பு
தூய்மைப் பணியாளர்களின் மேம்பாட்டுக்காக ரூ.50 கோடியில் வைப்பு நிதி உருவாக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை கடந்த ஆண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் கீழ், முக்கிய தூய்மைப் பணியாளா்கள் கணக்கெடுக்கப்படுவர். அவா்களது விவரங்கள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சரிபாா்க்கப்படும். இதன்பிறகு, முக்கிய தூய்மைப் பணியாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். முக்கிய தூய்மைப் பணியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களின் பணித் தன்மைக்கேற்ப பாதுகாப்பான முறையில் பணி செய்வது குறித்த பயிற்சிகள் வழங்கப்படும்.
முக்கிய தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், தமிழ்நாடு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படுவர். மேலும், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படுவதுடன், அவா்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் அனைத்து நலத் திட்டங்களையும் இணைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி அளவில் வைப்பு நிதி உருவாக்கப்படும். தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்துக்கான வைப்பு நிதியில் மாநில அரசின் பங்காக ரூ.10 கோடி அனுமதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.