வளர்ப்பு நாய்கள் கடித்ததில் 5 வயது சிறுமி படுகாயம்: 3 பேர் கைது
சிறுமியை நாய்கள் கடித்த விவகாரத்தில் உரிய விசாரணைக்குப் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளி சாலையில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி பூங்காவில் காவலாளியாக பணியாற்றி வருபவர் ரகு. இவர் தனது மனைவி சோனியா மற்றும் 5 வயது மகள் சுதக்ஷாவுடன் பூங்காவில் உள்ள அறையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று ரகு தனது உறவினர் ஒருவர் இறந்ததால் விழுப்புரம் சென்றுள்ளார். இதனிடையே நேற்று மாலை பூங்கா அருகே வசிக்கும் புகழேந்தி என்பவர் தான் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் பூங்காவுக்கு வந்துள்ளார். அப்போது பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி சுதக்ஷாவை இரு நாய்களும் கடித்துள்ளன. குழந்தையின் அழுகுரல் கேட்டு வந்த தாய் சோனியா குழந்தையை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் நாய்கள் கடித்துள்ளன.
நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, நாய்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. நாய்கள் கடித்ததில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்தவர்கள் மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆயிரம் விளக்கு போலீசார் புகழேந்தியை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
குழந்தைக்கு தனது செலவில் சிகிச்சை மேற்கொள்வதாக புகழேந்தி கூறியதையடுத்து சிறுமி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் இருந்து ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் நாய்களின் உரிமையாளர் புகழேந்தி, அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகிய 3 பேர் மீதும், 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆயிரம் விளக்கு போலீசார் கைது செய்தனர். பின்னர் 3 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
சிறுமியை நாய்கள் கடித்த விவகாரம் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
சிறுமியை கடித்த ராட்வீலர் நாய்களுக்கு உரிமையாளர்கள் வளர்ப்பு உரிமம் பெறவில்லை எனத் தெரியவந்துள்ளது. ஏன் உரிமம் பெறவில்லை? எனக்கேட்டு அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. உரிய விசாரணைக்குப் பின்னர் கால்நடைத்துறை உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தெருவில் திரியும் நாய்களாக இருந்தாலும் அதற்கு இணைக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து, மீண்டும் பிடித்த இடத்திலேயே விட வேண்டும் என்பது தான் மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய் பூனை போன்ற பிராணிகள் வளர்ப்பவர்கள் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும், தவறாமல் தடுப்பூசி செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.