வெடிகுண்டு வீசி அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
வெடிகுண்டு வீசி அண்ணன், தம்பியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெடிகுண்டு வீச்சு
கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை கொளத்தூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் என்ற கொளத்தூர் ஜெய் (வயது 32) இவருடைய தம்பி வசந்த் (23). இருவரும் சம்பவத்தன்று இரவு ஆட்டோவில் கேளம்பாக்கம் நோக்கி சென்றனர். மாம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்து விட்டு ஆட்டோவில் சென்றபோது ஒரு கும்பல் காரில் பின்தொடர்ந்து வந்து கேளம்பாக்கம்- வண்டலூர் சாலையில் ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டை வீசி விட்டு ஆட்டோவில் வந்த அண்ணன் தம்பி இருவரையும் வெட்ட முயன்றனர். இதில் சுதாரித்து கொண்ட கொளத்தூர் ஜெய் ஆட்டோவை வேகமாக கேளம்பாக்கம் நோக்கி ஓட்டி சென்றார்.
வெட்டு
காரில் வந்தவர்கள் பின்தொடர்து வந்து மீண்டும் மீண்டும் ஆட்டோவை இடித்தனர். சுமார் 2 கி.மீ. தூரம் சோனலூர் காட்டு பகுதி அருகே வந்தபோது ஆட்டோவை இடித்து தள்ளினர். பின்னர் ஆட்டோவில் வந்த அண்ணன், தம்பி இருவரையும் காரில் வந்தவர்கள் கத்தியால் வெட்டினர். இதில் அவர்கள் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து தாழம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கைது
விசாரணையில் கொளத்தூரை சேர்ந்த சேகர் என்கிற நாய் சேகர் (வயது 37) என்பவருக்கும் கொளத்தூர் ஜெய்க்கும் முன்விரோதம் இருந்ததும் தையூர் சின்னமா நகரை சேர்ந்த தேவகுமார் என்பவருக்கும் கொளத்தூர் ஜெய்க்கும் கஞ்சா விற்பனையில் முன்விரோதம் இருந்ததும் தெரியவந்தது. கொளத்தூர் ஜெய் என்பவரை கொலை செய்யும் நோக்கத்துடன் தேவகுமார், நாய் சேகர் ஆகியோர் தலைமையில் ஆட்டோவில் வந்தது விசாரணையில் தெரிய வந்தது.
இதில் சம்பந்தப்பட்ட சேகர் என்கின்ற நாய் சேகர், முடிச்சூரை சேர்ந்த மணிகண்டன் ( 27), பனங்காட்டுப்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ் (34), முடிச்சூரை சேர்ந்த கார்த்திக் (24), சென்னை சொரப்பனஞ்சேரியைச் சேர்ந்த அபிமன்யு (வயது 21) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு கார், ஒன்றரை கிலோ கஞ்சா, 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ள தேவகுமார் என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 5 பேர் மீதும் பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை முயற்சி, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.