தியாகராயநகர் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோவில் விரிவாக்க பணிக்கு ரூ.5 கோடி நிதி
சென்னை,
சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 3 ஆண்டுக்குள் இந்த பணிகளை முடிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஈடுபட்டுள்ளது. இதற்காக கோவில் அருகில் உள்ள நிலங்களை வாங்குவதற்கான நடவடிக்கையில், கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.14 கோடி செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. எனவே நிதி திரட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை பல்வேறு தரப்பினரிடம் இருந்து சுமார் 8 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டுள்ளது. இந்த பணிக்காக பூதான் என்ற பெயரில் திட்டம் ஒன்றை தொடங்கி தேவஸ்தான நிர்வாகம் நடத்தி வருகிறது.
இந்தநிலையில், தேவஸ்தானத்தின் சென்னை கோவில் விரிவாக்க பூதான் திட்டத்துக்கு பல்வேறு தரப்பை சேர்ந்த 9 பேர் ரூ.5 கோடியே 11 லட்சம் நன்கொடை நிதி வழங்கியுள்ளனர். இந்த நிதியை அவர்கள் தேவஸ்தானத்தின் சென்னை, புதுச்சேரி மண்டல ஆலோசனை குழு தலைவர் சேகர்ரெட்டியிடம் வழங்கினர். அந்த தொகை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பேற்க இருக்கும் கருணாகர ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.