சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 5 பஸ்நிலையங்கள் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி


சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 5 பஸ்நிலையங்கள் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும் - அமைச்சர் சேகர்பாபு பேட்டி
x

சென்னை பெருநகர வளர்ச்சி குழும அறிவிப்புகளின்படி அம்பத்தூர் எஸ்டேட் உள்பட 5 பஸ் நிலையங்கள் மொத்தம் ரூ.25 கோடியில் மேம்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 2023-24 நிதியாண்டின் அறிவிப்புகளில், மாநகர பஸ் நிலையங்களை தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகள் கொண்ட பஸ் நிலையங்களாக மேம்படுத்துவதும் ஒன்றாகும்.

அதன்படி சென்னை மாநகர 5 பஸ் நிலையங்களை மேம்படுத்துவது தொடர்பாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும தலைவரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு நேற்று நேரில் சென்று களஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னை பெருநகர பகுதியில் உள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், மாநகர பஸ் நிலையங்களை தரம் உயர்த்துவது தொடர்பாக அம்பத்தூர் எஸ்டேட், பெரியார் நகர், திரு.வி.க.நகர், முல்லை நகர் மற்றும் கவியரசு கண்ணதாசன் நகர் ஆகிய 5 மாநகர பஸ் நிலையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த 5 பஸ் நிலையங்களை மேம்படுத்துதல், இயக்கப்படுகின்ற பஸ்கள் முறையாகவும், சீராகவும் செல்வதற்கான வழிவகை செய்வது, பணிமனையில் நிர்வாக அலுவலகம் அமைப்பது, பஸ் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கான ஓய்வறைகளை மேம்படுத்துவது, பஸ் நிலையத்திற்கு வரும் பயனாளிக்கான அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வது, நவீன கழிப்பிட வசதிகளை உருவாக்குவது போன்ற aபல்வேறு பணிகளுக்காக ஒவ்வொரு பஸ் நிலையங்களுக்கும் தலா ரூ.5 கோடி மதிப்பீட்டில் (மொத்தம் ரூ.25 கோடி) நவீன வசதிகள் கொண்ட பஸ் நிலையமாக மேம்படுத்துவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வுகளின்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, எம்.எல்.ஏ.க்கள் ஜோசப் சாமுவேல், ஆர்.டி.சேகர் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்பட அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story