சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு ரூ.43 கோடி நிதி - அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு வழங்கினர்
சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு மேம்பாட்டு பணிக்கு ரூ.43 கோடியே 5 லட்சத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் பி.கே.சேகர்பாபு வழங்கினர்.
சென்னை மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழும திட்டத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்கு நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பெருநகர வளர்ச்சிக் குழும திட்ட நிதியிலிருந்து மாதவரம் சரக்குந்து முனையத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.30 கோடியே 30 லட்சம், மாநகராட்சி எந்திர பொறியியல் துறைக்கு 51 ஸ்கிட் ஸ்டீர் லோடர்கள் கொள்முதல் செய்ய ரூ.12 கோடியே 75 லட்சம் என மொத்தம் ரூ.43 கோடியே 5 லட்சம் நிதியை சென்னை மாநகராட்சிக்கு வழங்கினார்கள்.
பின்னர், அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து சாலைகளும் முழுமையாக போடப்பட்டுள்ளது. மழைக்காலங்களை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளை சுத்தம் செய்யும் பணிகள் மாவட்டங்கள் தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதேபோல, அனைத்து பகுதிகளுக்கும் இந்த வருடம் ஒதுக்கப்பட்ட தொகையில் 5 சதவீதம் தவிர, மற்ற அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டு அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது.
சென்னையில் முதற்கட்டமாக 5 ஆயிரம் சாலைப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கினால் அவற்றை அகற்றும் வகையில் 700-க்கும் மேற்பட்ட மோட்டார் பம்புகள் தயார்நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையிலும், பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையிலும் அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் புதிய திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், மேயர் பிரியா, எஸ்.சுதர்சனம் எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சமயமூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.