ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி கேமராக்களில் 4 புலிகள் பதிவு


ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதி கேமராக்களில் 4 புலிகள் பதிவு
x

ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகத்தில் உள்ள கேமராவில் 4 புலிகள் பதிவாகி உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் காப்பகத்தில் உள்ள கேமராவில் 4 புலிகள் பதிவாகி உள்ளதாக அதிகாரி ஒருவர் கூறினார்.

கண்காணிப்பு கேமரா

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக புலிகள், சிறுத்தைகள், கருஞ்சிறுத்தைகள், கரடிகள், செந்நாய்கள், மரநாய்கள்,மிளா மான்கள், புள்ளி மான்கள் என ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

புலிகள் இருப்பதால் இந்த புலிகள் காப்பகத்தில் கேமராக்களை பொருத்தி புலிகள் உள்ளிட்ட வனவிலங்குகளை கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்ட பிறகு புலிகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், புலிகள் எண்ணிக்கையை அறிந்து கொள்வதற்காக அடிக்கடி வனத்துறையினர் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகத்தில் உள்ள சேத்தூர் வனப்பகுதி, தேவதானம் வனப்பகுதி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம் வ.புதுப்பட்டி, வத்திராயிருப்பு வனப்பகுதி மற்றும் பிளவக்கல் அணை, கோவிலாறு அணை அமைந்துள்ள பகுதியில் உள்ள வனப்பகுதி மற்றும் சாப்டூர் வனப்பகுதிகளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்களை பொருத்தி இருந்தனர்.

4 புலிகள் பதிவு

மேலும் பொருத்தப்பட்ட கேமராக்களை 15 நாட்களுக்கு ஒரு முறை வனத்துறையினர் சுழற்சி அடிப்படையில் சென்று கண்காணித்து வந்தனர். கேமராக்கள் வன விலங்குகளை தெளிவாக படம் பிடித்துள்ளதா எனவும் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட வனப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கேமராக்களில் 4 புலிகள் வரை பதிவாகியுள்ளது. இதனால் வனத்துறையினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தை பொறுத்தவரை புலிகள் வசித்து வருகின்றன, புலிகளின் பாதுகாப்பு கருதி அதன் இருப்பிடத்தை வெளியே கூற முடியாத நிலை உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் இப்பகுதியில் புலிகள் இல்லை என்று தகவல் பரப்பப்பட்டு வந்தது. அதனை பொய்யாக்கும் வகையில் தற்போது 4 புலிகள் பதிவாகியுள்ளது.

கண்காணிப்பு

இது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதியில் கூடுதலாக கேமராக்கள் பொருத்தி புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த முறை பொருத்தப்பட்ட கேமராக்களில் புலிகள் காட்சிகள் பதிவாகாத நிலையில் தற்போது பொருத்தப்பட்டுள்ள கேமராக்களில் 4 புலிகள் வரை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Next Story