எண்ணூரில் முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை 4 பேர் கைது


எண்ணூரில் முன்விரோதத்தில் ரவுடி வெட்டிக்கொலை 4 பேர் கைது
x

முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர்,

எண்ணூர் வ.உ.சி. நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் என்ற ஜாகிர் உசேன் (வயது 32). பிரபல ரவுடியான இவர் மீது கொலை முயற்சி, அடிதடி போன்ற பல்வேறு வழக்குகள் எண்ணூர் போலீஸ் நிலையத்தில் உள்ளது. தற்போது ஆட்டோ ஓட்டி வந்தார்.

இவர், நேற்று முன்தினம் இரவு காமராஜர் நகர் 7-வது தெருவில் ரெயில்வே தண்டவாளம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் 6 பேர் கொண்ட கும்பல் கையில் வைத்திருந்த அரிவாளால் ஜாகீர் உசேனை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதில் தலை, முகம், கை, கால்களில் பலத்த காயம் அடைந்த ஜாகிர் உசேன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

4 பேர் கைது

இது குறித்து தகவல் அறிந்து வந்த எண்ணூர் போலீசார், கொலையான ரவுடி ஜாகிர் உசேன் உடலை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் தொடர்பாக கார்த்திக் என்ற அட்டு கார்த்திக் (28), அருண்குமார் (29), ரமேஷ்குமார் (31), கிஷோர் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளான பாம் ராஜேஷ், நிஜாமுதின் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

முன்விரோதம்

கைதான 4 பேரிடமும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், எண்ணூர் கத்திவாக்கம் மார்க்கெட் பகுதியில் கடந்த 5 மாதத்துக்கு முன்பு ரவுடி சுந்தர் மற்றும் அருண்குமாரை பொதுமக்கள் முன்னிலையில் ஜாகீர்உசேன் அடித்துள்ளார்.

இதற்கிடையில் மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த ஒத்த கை மூர்த்தியை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கொலை செய்த வழக்கில் ரவுடி சுந்தர் மற்றும் அருண்குமார் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருக்கும்போது சுந்தர், அருண்குமார் இருவரும் பொதுமக்கள் முன்னிலையில் தங்களை அடித்த ஜாகீர் உசேனை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.

அதன்படி சிறையில் இருந்து வெளியே வந்த அருண்குமார், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ஏற்கனவே உள்ள முன்விரோதத்தில் ரவுடி ஜாகீர் உசேனை கொலை செய்திருப்பது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Next Story