பனிமூட்டம் காரணமாக தரை இறங்க முடியாமல் சென்னை வந்த 4 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
பனிமூட்டம் காரணமாக சென்னை வந்த 4 விமானங்கள் தரை இறங்க முடியாமல் கோவை, பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு மேல் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன.
கத்தார் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து 248 பயணிகளுடன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு காலை 7 மணிக்கு வந்த விமானம் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன.
கோவையில் இருந்து 92 பயணிகளுடன் காலை 7.30 மணிக்கு சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் கோவைக்கே திரும்பி சென்றது. காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து 84 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கே திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் காலை 7.30 மணிக்கு மும்பையில் இருந்து 138 பயணிகளுடன் வந்த விமானமும் தரையிறங்க முடியாமல் கோவைக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும் மும்பை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் மலேசியாவில் இருந்து வந்த 6 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருந்தன.
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மஸ்கட், பெங்களூரு, ராஜமுந்திரி, கொல்கத்தா, டெல்லி ஆகிய 5 விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. வானிலை சீரானதும் திருப்பி அனுப்பப்பட்ட 4 விமானங்களும் மீண்டும் சென்னை திரும்பி வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.