கட்டுமாவடியில் 300 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கிய கடல் - மீனவர்கள் விளக்கம்
கட்டுமாவடியில் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது சாதாரண நிகழ்வுதான் என்று மீனவர்கள் விளக்கம் அளித்து உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடியில் 400-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நாட்டு படகு மூலம் மீன் பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கி இருந்தது. இதனால் மீனவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த கடல் உள்வாங்குவது மே மற்றும் ஜூன் மாதங்களில் வழக்கமாக நடக்கும் நிகழ்வுகளில் ஒன்றாகும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கணேசபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் கூறுகையில்,
கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி வீசும் காற்றுக்கு கொண்டல் காற்று அல்லது இழுவான் கொண்டல் என்று பெயர். இந்த காற்று வீசும்போது கரையோர பகுதியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். அதேபோன்று அமாவாசை நாட்களிலும் கரையோரப் பகுதிகளில் நீரோட்டம் அதிகமாக இருக்கும். மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசக்கூடிய காற்றுக்கு கச்சான் காற்று என்று பெயர். இந்த காற்று வீசும்போது கரையோரப் பகுதியில் உள்ள நீரோட்டம் முழுவதும் கடலுக்குள் சென்று விடும்.
இதனால் கடல் உள்வாங்கி கரையோரப் பகுதியில் உள்ள பாசிகளும், சேற்று பகுதிகளும் வெளியே தெரியும். அதேபோன்று பவுர்ணமி நாட்களிலும் மற்றும் சந்திரன் கிழக்கு பகுதியில் இருக்கும் பொழுதும் கரையோர பகுதிகளில் உள்ள நீரோட்டம் கடலுக்குள் செல்லும். இதனால் கடல் உள்வாங்கும். இந்த சுழற்சி முறையானது காற்று மற்றும் சந்திரனின் நிலையைப் பொறுத்து அமைகிறது. இது அடிக்கடி நிகழும் சாதாரண நிகழ்வாகும். இதனால் யாரும் அச்சப்படத் தேவையில்லை" என்று கூறினார்