சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் இருவரும் குற்றவாளிகள் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இருவருக்குமான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.
இன்று நேரடியாகவோ அல்லது காணொலி வாயிலாகவோ பொன்முடி மற்றும் அவரது மனைவி கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, இருவரும் இன்று கோர்ட்டில் ஆஜராகினர்.
கோர்ட் அளித்த தண்டனை விவரங்களும் முக்கிய நிகழ்வுகளும் வருமாறு:-
*அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் வயதை கருத்தில் கொள்ள வேண்டும் என அவரது தரப்பு வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ வாதிட்டார். பொன்முடி மருத்துவ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், பொன்முடியின் மனைவியும் தனது மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
*நீங்கள் என்ன விரும்புகிறீர்கள் என பொன்முடியிடம் நீதிபதி கேட்டார். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று பொன்முடி கோரிக்கை விடுத்தார்.
*இதையடுத்து இந்த வழக்கின் தண்டனை விவரத்தை நீதிபதி அறிவித்தார். இதன்படி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
*சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடியின் மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
* விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடியும் அவரது மனைவியும் 30 நாட்களுக்குள் சரணடைய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
* வரும் ஜனவரி 22-ம் தேதிக்குள் சரணடையாவிட்டால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சென்னை ஐகோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
.