அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை; 25 ஆயிரம் அபராதம் - அரசு அறிவிப்பு
அனுமதியின்றி பேனர் வைத்தால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் விளம்பர பலகைகள், விளம்பர பேனர்கள் மற்றும் பதாகைகளை உரிய அனுமதியின்றி நிறுவக்கூடாது. அவ்வாறு அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இதில் விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் படி உரிமம் பெறாமல் விளம்பர பலகை வைக்க முடியாது. அதேபோல் உரிமக்காலம் முடிந்ததும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும். விபத்திற்கு காரணமான பேனர், விளம்பர பலகை வைத்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். விளம்பர பலகை, பேனரால் விபத்து, உயிரிழப்பு நேர்ந்தால் அதனை வைத்த நிறுவனமோ, தனிநபரோ இழப்பீடு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பேனர் விழுந்து 3 பேர் பலியான நிலையில் விளம்பர பலகைகள் விவகாரத்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.