அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலி
அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில் மோதி 3 பேர் பலியானார்கள்.
மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் கப்பல் கட்டும் நிறுவனம் உள்ளது. இதில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷாஷத்தபா (வயது 21) என்பவர் அத்திப்பட்டு பகுதியில் தங்கி கடந்த 4 நாட்களுக்கு முன் பணியில் சேர்ந்து வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.
இவர் அத்திப்பட்டு ரெயில் நிலையத்துக்கு அருகே மின்சார ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நேற்று காலை கிடைத்த தகவலின் பேரில் கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல தண்டவாள பாதை வழியாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னை கும்மிடிப்பூண்டி ரெயில் மார்க்கத்தில் அத்திப்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அடுத்தடுத்து மேலும் 2 பேர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தனர். அவர்களது உடல்களையும் கைபற்றிய கொருக்குப்பேட்டை ரெயிவே போலீசார், 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
பலியான மேலும் 2 பேர் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த செய்யூர் மலைக்காலணி பகுதியை சேர்ந்த சுகுமார் (59) மற்றும் திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த மணி (55) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் கொருக்குப்போட்டை பகுதியில் தங்கி எலக்ட்ரீசியன் வேலை செய்ததாக தெரிகிறது.
இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அடுத்தடுத்து 3 பேர் ரெயிலில் அடிபட்டு பலியான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.