ரவுடிகள் கொலையில் 3 பேர் கைது


ரவுடிகள் கொலையில் 3 பேர் கைது
x

மயிலம் போலீஸ் நிலையத்துக்கு சென்ற ரவுடிகள் கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தேடப்பட்ட 6 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர்.

விழுப்புரம்

புதுவை மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 28). கோர்க்காடு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (32). ரவுடிகளாக வலம் வந்த இவர்கள், கடந்த 10-ந் தேதி ஒரே மோட்டார் சைக்கிளில் மயிலம் போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்து போட சென்றனர்.

வானூர் அருகே செங்கமேடு- திருவக்கரை சாலையில் சென்றபோது, 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பிச்சென்றது. இந்த பயங்கர கொலை குறித்து வானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையான அருண்குமார் மற்றும் அன்பரசனை தமிழக பகுதியான வழுதாவூரை சேர்ந்த முகிலன் தரப்பினர் முன்விரோதம் காரணமாக தீர்த்து கட்டியது தெரியவந்தது.

இந்த இரட்டை கொலையில் முகிலன் தரப்பை சேர்ந்த சிலரை தனிப்படை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் ரவுடிகள் கொலை தொடர்பாக வில்லியனூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20), வானூரை அடுத்த மாத்தூரை சேர்ந்த வீரசெழியன் (26), வழுதாவூர் ஜெகன் (23) ஆகிய 3 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கோர்ட்டில் சரண்

இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி முகிலன், வழுதாவூர் வினித், சத்யராஜ், ராம்குமார், பிள்ளையார்குப்பம் மதன், பொறையூர் சூர்யா ஆகியோர் சென்னை அம்பத்தூர் கோர்ட்டில் நேற்று மதியம் சரணடைந்தனர். அவர்களை 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வானூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story