சென்னை பாடியில் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது - மகனை பழிவாங்க தந்தையை கொன்றது அம்பலம்
சென்னை பாடியில் ரவுடி கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகனை பழிவாங்க தந்தையை கொன்றது தெரியவந்தது.
சென்னை வில்லிவாக்கம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் சுரேஷ் என்ற கருக்கா சுரேஷ் (வயது 40). ரவுடியான இவர், பாடி வன்னியர் தெரு அருகே சென்றபோது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்தது. இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய விஜயகுமார் (31), மணிவண்ணன் (25), டில்லிராஜ் (31) ஆகிய 3 பேர் நேற்று முன்தினம் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாதவரம் ரவுண்டானா அருகே மறைந்திருந்த சூர்யா என்ற மணிகண்டன் (30), சிவசங்கர் (35) வேதாச்சலம் (23) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் கடந்த செப்டம்பர் மாதம் புளியந்தோப்பு பகுதியில் சேட்டு என்ற கார்த்திகேயன் (36) என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சஞ்சய் என்ற வாலிபர் பேசின் பிரிட்ஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சேட்டுவின் தம்பியான சூர்யா, சஞ்சயை பழிவாங்க காத்திருந்தார். சஞ்சய் சிறையில் இருப்பதால் அவருடைய தந்தையான ரவுடி கருக்கா சுரேசை நண்பர்களுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கொலை செய்வதற்கு முன்பாக சேட்டுவின் புகைப்படம் அருகே "உன் கொலைக்கு பழிதீர்க்க போகிறோம்" என்று சூர்யா தனது நண்பர்களுடன் சபதம் செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
கைதானவர்களிடம் இருந்து அரிவாள், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.