கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி ரூ.13½ லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையை அடுத்த எண்ணூர் அன்னை சிவகாமி தெருவை சேர்ந்தவர் கொளஞ்சியப்பன் (வயது 48). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊரான கள்ளக்குறிச்சி மாவட்டம் எறையூரில் இருந்த தனது வீட்டை விற்று விட்டு அந்த பணத்தை வைத்திருந்தார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த ஜான் ரொசாரியோ (45) மற்றும் மரிய சூசை (35) ஆகியோர் கொளஞ்சியப்பனிடம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக பணத்தை எடுக்க முடியும் என்று ஆசை வார்த்தை கூறினர்.
இதையடுத்து கொளஞ்சியப்பன் தனது வீட்டை விற்ற பணம் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தை ஜான் ரொசாரியோ, மரிய சூசை மற்றும் இவர்களது கூட்டாளியான விழுப்புரம் மாவட்டம் சபரி நாயக்கன் பேட்டை பகுதியை சேர்ந்த தனசேகரன் (48) ஆகியோரிடம் கொடுத்தார். ஆனால் அவர்கள் கூறியதைப் போல் முதலீடு செய்த பணத்தை கேட்ட போது அவரை மிரட்டியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து கொளஞ்சியப்பன் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜான் ரொசாரியோ, மரிய சூசை, தனசேகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
இதில் 3 பேரும் வெளிநாட்டு நபர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என அப்பாவி மக்களை ஏமாற்றி முதலில் பணத்தை வழங்கி பின்னர் கிரிப்டோ கரன்சியின் மதிப்பு குறைந்ததாக காரணம் காட்டி மக்களை ஏமாற்றியது தெரிய வந்தது. மோசடியில் ஈடுபட்ட 3 பேரையும் சைபர் கிரைம் போலீசார் நேற்று பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.