22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர் - அமைச்சர் ராமச்சந்திரன்


22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகம் வந்துள்ளனர் - அமைச்சர் ராமச்சந்திரன்
x

கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

செங்கல்பட்டு

அமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேற்று வந்தார். மாமல்லபுரம் கடற்கரை சாலையில் தனியாருக்கு குத்தகை விடப்பட்டு பின்னர் குத்தகை முடிந்த நிலையில், எந்தவித பராமரிப்பும் இன்றி, நீச்சல் குளம், அறைகள், உணவங்கள் உள்ளிட்ட பகுதிகள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

சுற்றுலா விடுதியை மீண்டும் சீரமைத்து பார்வையாளர்கள் தங்குவதற்கு ஏற்ற மாதிரி மேம்படுத்தி, மீண்டும் இதனை நடைமுறைக்கு கொண்டு வருவது குறித்து அமைச்சர் கா. ராமச்சந்திரன் பாழடைந்து கிடக்கும் இடங்களை சுற்றி பார்த்து ஆய்வு செய்தார். அப்போது சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா விடுதியை எந்த மாதிரியான முறையில் கட்டிட இடிபாடுகளை அகற்றி மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.

22 கோடி சுற்றுலா பயணிகள் வருகை

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது:-

முட்டுக்காடு படகு துறையில் அதிவேக படகு, சைக்கிள் படகு, சாதாரண படகு ஆகியவை இயக்கப்படுகின்றன. இன்னும் 2 மாதத்தில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் ரெஸ்டாரண்டு படகு இயக்கப்பட உள்ளது. கீழே 100 பேர் அமருகிற வகையிலும், மேல் தளத்தில் சுற்றி பார்க்கின்ற வகையிலும் இவை அமையும். ஏதாவது விஷேச நிகழ்ச்சிகள் கூட பொதுமக்கள் இதில் நடத்தலாம். முழுக்க, முழுக்க தனியார் பங்களிப்புடன் இவை நடத்தப்பட உள்ளது.

அதில் வரும் வருமானத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு 10 சதவீதம் கொடுத்து விடுவார்கள். அதற்கான பணிகள் விரைவாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாத்துறை மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடைந்து உள்ளது. 2022-23-ம் ஆண்டில் கடந்த மார்ச் மாதம் வரை 22 கோடி சுற்றுலா பயணிகள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். 2022-24-ம் ஆண்டு 30 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

முதலியார்குப்பத்தில்

மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலுக்கு பெரிய நட்சத்திர ஓட்டல்களில் உள்ளது போன்று மாநாட்டு அரங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்து வருகிறோம். மாமல்லபுரத்தை மேம்படுத்தி அதிக சுற்றுலா பயணிகள் வருவதற்கு மத்திய அரசிடம் நிதி கேட்டுள்ளோம். சுற்றுலாத்துறைக்கு மொத்தம் ரூ.175 கோடி நிதி கேட்டுள்ளோம். அதில் ரூ.75 கோடி மாமல்லபுரம் வளர்ச்சி பணிக்கு மட்டும் செலவு செய்ய முடிவு செய்துள்ளோம். முதலியார்குப்பத்தில் தீவு மாதிரி உள்ள இடத்தை மேம்படுத்தி பிரபலப்படுத்த முடிவு செய்து உள்ளோம். அங்கு குடில்கள் அமைக்கப்பட உள்ளது. பார்வையாளர்கள் காலை முதல் மாலை வரை ஒரு நாள் முழுவதும் அங்கு தங்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, மாமல்லபுரம் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டல் மேலாளர் பிரபுதாஸ், மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் எம்.வி.மோகன்குமார் விசுவநாதன், மாமல்லபுரம் நகர வி.சி.க. செயலாளர் எஸ்.அய்யப்பன் ஆகியோர் இருந்தனர்.


Next Story