போதைப்பொருட்கள் பயன்படுத்திய கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது
சென்னை அருகே போதைப்பொருட்கள் பயன்படுத்தியதாக கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள பொத்தேரியில் தனியார் கல்லூரி ஒன்றை சுற்றியுள்ள விடுதிகளில் போலீசாரால் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. மேலும் தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சாவுக்கு பயன்படுத்தக்கூடிய போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக தாம்பரம் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஆயிரம் பேர் கொண்ட குழு இந்த ஆய்வு நடத்தியது. இதன்படி குடியிருப்பில் உள்ள 688 வீடுகளில் நடத்திய சோதனையில் 15 பேரிடம் இருந்து போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 15 பேரிடம் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் கைப்பற்றப்பட்டு 20 வழக்குகள் பதிந்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொத்தேரியில் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் சோதனை நடத்தி கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 60 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.