200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது


200 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது
x

சேலத்தில் பெய்த பலத்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

சேலம்

சேலத்தில் பெய்த பலத்த மழையால் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்தது. இதனால் சேலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை சேலத்தில் கனமழை கொட்டி தீர்த்தது.

இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. இதனால் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சேலம் பெரமனூர், கோவிந்தகவுண்டர் தோட்டம், தோப்புக்காடு, சாமிநாதபுரம், அரிசிபாளையம், அய்யனார் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது.

அதிகாலையில் மழைநீர் புகுந்ததால் வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் திடுக்கிட்டு எழுந்தனர். வீட்டுக்குள் மழைவெள்ளம் பாய்ந்து வருவதை கண்டு செய்வதறியாமல் திகைத்தனர். உடனே வீட்டில் இருந்த பொருட்களை பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்த தொடங்கினர்.

தங்களது உடைமைகள் மற்றும் குழந்தைகளை தூக்கிக்கொண்டு அலறி அடித்துக்கொண்டு மேல் வீடுகளின் மாடிக்கு சென்றனர். வெள்ளக்காடாக மாறிய அந்த பகுதியே பெரும் பரபரப்பாக காட்சி அளித்தது.

இருப்பினும் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் மழைவெள்ளத்தில் நனைந்து சேதமாயின. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர். பின்னர் வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை பாத்திரங்கள் மூலம் வெளியேற்றினர்.

மாணவர் விடுதி

இதற்கிடையே தோப்புக்காடு பகுதியில் அரசு மாணவர் விடுதியில் மழைநீர் புகுந்தது. இதனால் மாணவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்த மழையால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் நேற்று மாநகர் பகுதியில் பல இடங்களில் உள்ள சாலைகள் சேறும், சகதியுமாக காணப்பட்டன.

மழைவெள்ளம் குறித்து தகவல் அறிந்த வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினர். பின்னர் மழை நீரை வெளியேற்றவும், சேறும், சகதியுமான சாலைகளை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி 6 பொக்லைன் எந்திரங்கள், 3 டிப்பர் லாரிகள், 20 நீர் இறைக்கும் எந்திரம், 3 டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை வரவழைத்து மழை நீரை வெளியேற்றி, சாலைகளை சுத்தம் செய்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுத்தனர். பின்னர் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

இந்த ஆய்வின் போது மண்டல குழுத்தலைவர்கள் கலையமுதன், உமாராணி, மாநகர நல அலுவலர் யோகானந், உதவி செயற்பொறியாளர்கள் செந்தில்குமார், செல்வராஜ், சுகாதார அலுவலர்கள் பாலு, மணிகண்டன், சுகாதார ஆய்வாளர்கள் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் கூறும்போது,'கோவிந்தகவுண்டர் தோட்டம் பகுதியில் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் பலர் பிளாஸ்டிக் பொருட்களை போடுகின்றனர். இதனால் மழைநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கின்றது. தற்போது பெய்த கனமழையால் கால்வாயில் மழை நீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. இதனால் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்களை போடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கால்வாயை தூர்வார வேண்டும்' என்றனர்.

மழை அளவு

ஏற்காட்டில் நேற்று அதிகபட்சமாக 5½ சென்டி மீட்டர் மழை பதிவானது. அதே போன்று மாவட்டத்தில் பதிவான மழைஅளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

கெங்கவல்லி-20, வீரகனூர்-20, கரியக்கோவில்-17, சேலம்-11.7, ஓமலூர்-11, காடையாம்பட்டி-5, சங்ககிரி-2.1, எடப்பாடி-1.


Next Story