சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம் - 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு


சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இணையதள சேவை முடக்கத்தால் 20 விமானங்கள் தாமதம் - 4 மணி நேரம் பயணிகள் தவிப்பு
x

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் இணையதள சேவை திடீரென முடங்கியதால் 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் பயணிகள் 4 மணி நேரத்துக்கும் மேலாக தவித்தனர்.

சென்னை

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் புறப்பாடு விமானங்களில் பயணம் செய்ய வரும் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் அந்தந்த விமான நிறுவன கவுண்ட்டர்களில் கம்ப்யூட்டர்கள் மூலமாக வழங்குவார்கள். அந்த கம்ப்யூட்டர்கள் இயங்குவதற்கான இணையதளங்கள் நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இயங்கவில்லை. இதனால் பயணிகளுக்கு போர்டிங் பாஸ்கள் கம்ப்யூட்டர் மூலமாக வழங்க முடியவில்லை. இதையடுத்து அந்தந்த விமான நிறுவன கவுண்ட்டர்களில் உள்ள ஊழியர்கள் போர்டிங் பாஸ்களை கைகளால் எழுதி கொடுத்தனர்.

இதனால் ஒவ்வொரு கவுண்ட்டர்களிலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்க வேண்டியது நிலை ஏற்பட்டது. இதனால் விமானங்களில் பயணிகள் ஏறுவதும் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய அனைத்து விமானங்களும் நேற்று அதிகாலை முதல் தாமதமாக புறப்பட்டு சென்றன.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 விமானங்களும், உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து அந்தமான், ஆமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூரு உள்ளிட்ட 12 விமானங்களும் என 20 விமானங்கள் தாமதம் ஆனதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். ஆனால் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் அனைத்தும் குறித்த நேரத்தில் வந்து சேர்ந்தன.

இது பற்றி சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்ட போது, இணையதள இணைப்பில் திடீரென ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சர்வர்கள் சரிவர இயங்கவில்லை. இதையடுத்து ஒவ்வொரு கவுண்ட்டர்களிலும் கூடுதலாக ஊழியர்களை நியமித்து போர்டிங் பாஸ்கள் கைப்பட எழுதி கொடுக்கப்பட்டது.

இதனால் பயணிகள் விமானங்களில் ஏறுவது தாமதம் ஆகியதால் விமானங்கள் புறப்படுவதிலும் சிறிது தாமதம் ஏற்பட்டது. காலை 6 மணிக்கு மேல் இணையதள இணைப்பு சீராகிவிட்டது. எனவே அதன்பின்னர், விமான சேவைகளும் வழக்கம் போல் செயல்பட்டன என கூறினர்.

1 More update

Next Story