2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும்


2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும்
x
தினத்தந்தி 13 July 2023 12:41 AM IST (Updated: 13 July 2023 4:27 PM IST)
t-max-icont-min-icon

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த 2 குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும் என கலெக்டர் வளர்மதி பேசினார்.

ராணிப்பேட்டை

2 குழந்தைகள்

உலக மக்கள் தொகை தினத்தையொட்டி மக்கள் தொகை பெருக்கத்தினை கட்டுப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகன தொடக்க நிகழ்ச்சி ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த ஆண்கள் 25 வயதிற்கு பிறகும், பெண்கள் 21 வயதிற்கு பிறகும் திருமணம் செய்து கொண்டு இரண்டு குழந்தைகள் என்ற அளவில் இருக்க வேண்டும். தாய், சேய் நலம் பேணி குழந்தைகள் நல்வாழ்வு வாழவும், சிறந்த கல்வியையும், வேலை வாய்ப்பையும், வாழ்க்கை வசதிகளையும் பெற சிறு குடும்ப நெறி ஏற்பது ஒன்றுதான் சிறந்த வழியாகும்.

விழிப்புணர்வு

பிறப்பு விகிதத்தை குறைக்க மக்கள் தொகையின் தாக்கம் பற்றி அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் இலவசமாக கருச்சிதைவு செய்யப்படுகிறது. மேலும் கருச்சிதைவு செய்து கொள்ளும் பயனாளிகளின் ரகசியம் காக்கப்படும்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக குடும்பநல சேவைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான நிரந்தர குடும்பநல அறுவை சிகிச்சைகள் இலவசமாக செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் குடும்ப நல துணை இயக்குனர் மணிமேகலை, இணை இயக்குனர் விஜயா முரளி, மக்கள் கல்வி தகவல் அலுவலர் பழனிமலை, மாவட்ட புள்ளியியல் உதவியாளர் அம்பேத்கர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story