2 தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மோதல்


2 தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மோதல்
x
தினத்தந்தி 6 July 2023 12:07 AM IST (Updated: 6 July 2023 12:24 PM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி பஸ் நிலையத்தில் 2 தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் மோதிக்கொண்டனர். அப்போது ஒருவரையொருவர் தலை முடியை பிடித்து இழுத்து தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்

திட்டக்குடி,

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 5-க்கும் மேற்பட்ட தனியார் நர்சிங் கல்லூரிகள் உள்ளன. இதில் திட்டக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தாங்கள் படிக்கும் கல்லூரி தான் பெரியது என்று கூறி மாணவிகளிடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் காலை ஒரே கிராமத்தை சேர்ந்த 2 கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கல்லூரிகளுக்கு செல்வதற்காக பஸ்சில் வந்தபோது தங்கள் கல்லூரியின் பெருமைகளையும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் மாறி மாறி பேசினர். இதனால் ஓடும் பஸ்சிலேயே மாணவிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதை பஸ்சில் வந்த சக பயணிகள் பார்த்து, சமாதானப்படுத்தினர். மேலும் கல்லூரிக்கு சென்று ஒழுங்காக படியுங்கள் என்று அறிவுரை கூறினர்.

மாணவிகள் மோதல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் கல்லூரி முடிந்ததும் மாணவிகள் தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக பஸ் ஏற திட்டக்குடி பஸ் நிலையத்துக்கு வந்தனர். அப்போது அங்கு யார் கல்லூரி பெரியது? என்று 2 கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் ஒருவரையொருவர் கையால் தாக்கிக்கொண்டனர். சில மாணவிகள் ஒருவரையொருவர் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியபடி ஆபாசமாக திட்டினர். இதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்து, அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் மாணவிகளோ யார் சொல்வதையும் கேட்கவில்லை.

போலீசார் விசாரணை

இது குறித்து பயணிகள், திட்டக்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து மாணவிகளை சமாதானப்படுத்தி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் மாணவிகளின் பெற்றோர்களை நேரில் வரவழைத்தனர். அங்கு பெற்றோர்கள் முன்னிலையில் மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். திட்டக்குடி பஸ் நிலையத்தில் 2 கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story