தஞ்சையில் என்.ஐ.ஏ.வால் கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 5-ந்தேதி வரை காவல்
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை,
பயங்கரவாத அமைப்புகளுக்கு இளைஞர்களை சேர்த்தது தொடர்பாக சென்னை, தஞ்சை, ஈரோடு உள்ளிட்ட 10 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். தஞ்சாவூரில் 'ஹிஷாப் உத்தகீர்' என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் என கருதப்படும் 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் 5 மணி நேரத்திற்கு மேலாக சோதனை செய்து செல்போன்கள், ஹாா்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ்கள், சில புத்தகங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினா்.இதைத்தொடா்ந்து அப்துல் ரகுமான் (வயது 22), முஜிபுா் ரகுமான் (46), ஆகிய இருவரையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனா்.
பின்னர் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு கோர்ட்டில் ஆஜர் படுத்த வேண்டி, நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதியின் வீட்டிற்கு சென்று நீதிபதி இளவழகன் முன்பு கைது செய்யபட்ட 2 பேரையும் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஜூலை 5-ந்தேதி வரை அவர்களை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.