உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
உத்திரமேரூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயமடைந்த மற்றொருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து
காஞ்சீபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த மானாமதி கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிஷ் (வயது 19). இவர் சென்னை போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி நர்சிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
வேலூர் மாவட்டம் சேதுவளை கிராமத்தைச் சேர்ந்தவர் அப்னா ஜோசப் (20). இவரும், ஹரிசும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். நண்பன் ஹரிஷை பார்ப்பதற்காக அப்னா ஜோசப் மானாமதி கண்டிகைக்கு வந்தார். நேற்று முன்தினம் இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பெருநகர் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பெருநகர் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் (61) மோட்டார் சைக்கிளில் பெருநகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். வந்தவாசி-காஞ்சீபுரம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த அப்னா ஜோசப் பன்னீர்செல்வத்தை முந்தி செல்ல முயற்சித்தார். அப்போது நிலைதடுமாறி பன்னீர்செல்வம் ஓட்டி சென்ற மோட்டார் பைக்கின் மீது மோதினார்.
கல்லூரி மாணவர் பலி
இதில் தூக்கி வீசப்பட்ட பன்னீர்செல்வம் மற்றும் அப்னா ஜோசப் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். ஹரிஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது பற்றி பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுகுறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 பேர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.