இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அமைக்க வேண்டும்
உளுந்தூர்பேட்டை-சேலம் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அமைக்க வேண்டும் நாடாளுமன்றத்தில் பொன்.கவுதமசிகாமணி எம்.பி. கோரிக்கை
புதுடெல்லி
புதுடெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி எம்.பி. பொன்.கவுதமசிகாமணி பேசியதாவது:-
கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உளுந்தூர்பேட்டை முதல் சேலம்வரை தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை அமைப்பதற்கு கடந்த 2008-ம் ஆண்டு ரூ.941 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் தொடங்கியது. இந்த சாலைப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக கடந்த 2013-ம் ஆண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சாலைப்பணியானது இதுவரை நிறைவு செய்யப்படவில்லை. ஆத்தூர், உடையார்பட்டி, வாழப்பாடி, சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருவம், எலவனாசூர்கோட்டை, உளுந்தூர்பேட்டை ஆகிய ஊர்களில் உள்ள புறவழிச்சாலையில் 4 வழிச்சாலைகள் அமைக்கப்படாமல் இரு வழிச்சாலையாகவே உள்ளது. அதேபோல் புறவழிச்சாலையில் கட்டப்பட்ட மேம்பாலங்கள். பாலங்கள் இரு வழியாக குறுகிய அளவில் கட்டப்பட்டுள்ளது.
உளுந்தூர்பேட்டை-சேலம் செல்லும் சாலையில் உள்ள புறவழிச்சாலையில் இரு வழிச்சாலையாக உள்ளதாலும், மேம்பாலங்களும் இரு வழிச்சாலையாக குறுகியதாக கட்டப்பட்டுள்ளதால் வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளதோடு, அதிக விபத்துக்களும் நிகழ்ந்து வருகிறது. கடந்த 11 வருடங்களில் நடந்த வாகன விபத்துகளில் சுமார் 1036-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த சாலைகளில் பெரிய கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே உளுந்தூர்பேட்டை-சேலம் செல்லும் சாலையில் உள்ள புறவழிச்சாலையில் இரு வழிச்சாலையை 4 வழிச்சாலையாக அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.