கும்மிடிப்பூண்டி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி


கும்மிடிப்பூண்டி அருகே சாலை தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே சாலை தடுப்பு சுவரில் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திருவள்ளூர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த நுக்கனா பள்ளி என்ற கிராமத்தை சேர்ந்தவர் வெங்கட்ரமனா (வயது 28). இவரும் இவரது நண்பரான அதே கிராமத்தை சேர்ந்த அருண் (32) ஆகிய 2 பேரும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் நள்ளிரவு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை வெங்கட்ரமனா ஓட்டி வந்ததார்.நேற்று அதிகாலை கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி அருகே வரும் போது, நெடுஞ்சாலையில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு தமிழகத்தை சேர்ந்த ஆரம்பாக்கம் போலீசாரும், ஆந்திராவை சேர்ந்த தடா போலீசாரும் வந்த நிலையில், சம்பவம் நடந்தது யாருடைய எல்லை? என்பது தெளிவாக உறுதி செய்யப்படாத காரணத்தால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க தொடர்ந்து காலதாமதம் ஆனது. இதனையடுத்து ரோட்டில் 2 உடல்களும் சுமார் 5 மணிநேரமாக கிடந்த நிலையில், இரு மாநில போலீசாரும் அங்கு காத்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவ இடத்திற்கு ஆந்திர மாநிலம் தடாவை சேர்ந்த சர்வேயரும், கிராம நிர்வாக அதிகாரியும் நேரில் வந்து விபத்து நடந்த பகுதி ஆந்திரா என உறுதி செய்தனர்.

இதனையடுத்து இந்த விபத்து குறித்து ஆந்திர மாநிலம் தடா போலீசார் விசாரணை நடத்த ஒப்புக்கொண்டு விபத்தில் உயிரிழந்த இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.


Next Story