வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதை பவுடர், கஞ்சா பறிமுதல்


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதை பவுடர், கஞ்சா பறிமுதல்
x

இரணியல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதை பவுடர் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2 கிலோ போதை பவுடர் மற்றும் ஒரு கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

ரகசிய தகவல்

குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் இரணியல் அருகே உள்ள காரங்காடு தெற்கு தெருவில் ஒரு வீட்டில் போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை சரக ஐ.ஜி. தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதிரடி சோதனை

இந்த தகவலின் பேரில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் இரணியல் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்மூர்த்தி தலைமையிலான போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று அந்த வீட்டில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கிருந்து 4 பேர் தப்பியோட முயன்றனர். உடனே, போலீசார் அவர்களில் 3 பேரை மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார்.

போதை பவுடர், கஞ்சா...

இதையடுத்து வீட்டில் சோதனை செய்ததில் 2 கிேலா போதை பவுடர், ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் போதைபவுடர், கஞ்சா மற்றும் ரூ.25 ஆயிரம், 5 செல்போன், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில், நாகர்கோவில் மறவன்குடியிருப்பை சேர்ந்த விமல்ராஜ்(வயது 20), திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த அசாருதீன் என்ற அசன்(29), நாகர்கோவில் பார்வதிபுரம் கீழப்பெருவிளையை சேர்ந்த நரேன் ஹரிகுமார் (34) என்பது தெரியவந்தது. மேலும், தப்பியோடியவர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்த ஜெகன் என்பது தெரியவந்தது.

மாணவர்களை குறி வைத்து

போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா, போதை பவுடர் வெளிமாவட்டத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

பின்னர், குமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோகைன்?

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட போதைபவுடர் கோகைன் வகையை சேர்ந்ததாக இருக்காலாம் என போலீசார் கருதுகின்றனர். இதனால், போதை பவுடரை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளனர். அதன்படி இந்த பவுடர் கோகைன் வகையை சேர்ந்ததாக இருந்தால், சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


Next Story