மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் அபராதம் வசூல் - மோசடி நபர்கள் 2 பேர் கைது
மாநகராட்சி அதிகாரிகள் போல் நடித்து கடைகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ரசீது இல்லாமல் அபராதம் வசூலித்த மோசடி நபர்கள் 2 பேர் போலீசில் சிக்கினர்.
சென்னை பாரிமுனை மலையப்ப பெருமாள் கோவில் தெருவில் வணிக நிறுவனம் நடத்தி வருபவர் மிட்டல் லால். அவரது கடைக்கு வந்த 2 பேர், தாங்கள் சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் இருந்து வரும் சுகாதாரத்துறை அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு கடையில் சோதனை நடத்தியுள்ளனர்.
தமிழக அரசின் தடையை மீறி, பிளாஸ்டிக் பொருட்கள் அதிக அளவில் கடையில் விற்பனை செய்வதாக கூறிய அவர்கள் இருவரும் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால், அபராதம் வசூலிப்பதற்கான ரசீது புத்தகம் எதுவும் அவர்களிடம் இல்லை.
இதனால், சந்தேகம் அடைந்த மிட்டல் லால், உடனடியாக எஸ்பிளனேடு போலீசுக்கு ரகசிய தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார், இருவரிடம் நடத்திய விசாரணையில், பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது.
மேலும், இருவரும் மாநகராட்சி அதிகாரிகள் இல்லை என்ற குட்டும் உடைந்தது. இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி சாந்தகுமாரி என்ற பெயரில் ஒரு 'விசிட்டிங் கார்டு' வைத்திருந்ததும், அதை வணிக நிறுவனங்களில் காண்பித்து சோதனை நடத்துவது போல் நடித்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்காக அபராதம் விதிப்பதாக பணம் வசூல் செய்ததும் தெரியவந்தது.
இந்த இருவரும் பாரிமுனை, மண்ணடி, கொத்தவால்சாவடி, சவுகார்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில், வணிக நிறுவனங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் சுமார் ரூ.4 லட்சம் வசூல் செய்துள்ளனர்.
இருவரையும் கைது செய்துள்ள எஸ்பிளனேடு போலீசார், விசிட்டிங் கார்டில் குறிப்பிடப்பட்ட சாந்தகுமாரி என்ற பெயரில் யாரும் பின்னணியில் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.